கரோனாவுக்கு தடுப்புமருந்தை தயாரிக்க உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் பல்வேறு நிறுவனங்கள் கரோனா தடுப்புமருந்து ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் கரோனா தடுப்புமருந்தை உருவாக்கும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிட்-19 தடுப்புமருந்தை அமெரிக்கா, ஐப்பான், ஐரோப்பியா நீங்கலாக மற்ற நாடுகளுக்கு விநியோகிக்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிட்-19 தடுப்புமருந்தின் முதல்கட்ட மருத்துவ பரிசோதனைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த புதுமையான தடுப்புமருந்திற்கு ஒத்துழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எலிகளுக்கு முதலில் இந்தத் தடுப்புமருந்து அளிக்கப்பட்டது. அதில் இவை மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது" என்றார்.
மேலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எலா கூறுகையில், "தடுப்புமருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எங்களுக்கு உள்ள அனுபவம் பாதுகாப்பான, மலிவு விலையுள்ள தடுப்புமருந்துகளை உலக நாடுகளுக்கு வழக்கு உதவி செய்யும்" என்றார்.
உலகெங்கும் தற்போது வரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஐநா ஊழியர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்து'- ரஷ்யா அறிவிப்பு