ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. இதனால் பெண்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் காவலன் செயலி பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் கர்நாடகாவில் மெட்ரோ ரயில்களில் இரவு நேரங்களில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ’’நம்ம மெட்ரோ’’ ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் 30% பெண்களே பயணம் செய்கின்றனர். பெரும்பாலும் காலை, பகல் நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்படும்.
அந்த நேரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நேரங்களில் பெண்கள் அச்சமின்றி மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கு இரவு 9 மணிக்கு பிறகு, பெண் காவலர் ஒருவர் ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல் சிசிடிவி கேமராக்களிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உன்னோவில் 3 வயது குழந்தைக்கு வன்கொடுமை - கயவனைக் கைது செய்த காவலர்கள்!