பெங்களூரு : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சவிதா சர்மா என்பவர், ராஜஸ்தானி உணவினை ஆர்டர் செய்வதற்காக பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்ட ஹோட்டலின் இணையதள முகவரிக்குச் சென்று தேடிக்கண்டறிந்து ஆர்டர் செய்துள்ளார். கூடுதல் உணவு வேண்டுமென்றால் 10 ரூபாய் செலுத்தவும் என ஹோட்டலின் போலியான முகவரி திரையில் தோன்றியுள்ளது.
இதையடுத்து அந்த முகவரிக்குச் சென்று சவிதா பணம் செலுத்துகையில், 10 ரூபாய்க்கு பதிலாக 50 ஆயிரம் ரூபாய் அந்தப் பரிவர்த்தனையில் பறிபோயுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சவிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய சைபர் வல்லுநர் அபிநவ் சவுரப், "சைபர் குற்றங்கள் பல வகைகளில் நடக்கின்றன. ஆன்லைன் பணம் திருட்டு, ஆன்லைன் நோட்டமிடல், தரவு திருட்டு ஆகியவை இதில் அடங்கும். இதனை விசாரிக்க சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன.
ஒரு சைபர் கிரிமினலால் ஒரு இடத்திலிருந்து இணைய சேவை உள்ள சாதனத்தை, வங்கிக் கணக்கை முடக்க முடியும். இதுபோன்ற குற்றங்கள் நிகழும்போது சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும்.
மக்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகள், சிவிவி, ஓடிபி போன்றவற்றை மற்றவர்களுடன் பகிராமல், விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது: ரூ.35 ஆயிரம் பறிமுதல்!