கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் இருந்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நடந்த கல்வீச்சு, வன்முறை சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர்.
கலவரம் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர். கலவரத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், கலவரத்திற்கு தொடர்புடைவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய குற்ற பிரிவு துணை காவல் ஆணையர் குல்தீப் ஜெயின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கலவரத்திற்கு தொடர்புடைவர்களை சிறையில் அடைப்பதே எங்கள் நோக்கம். குற்றவாளிகளை வெளியே அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்திடம் காவல்துறை கோரிக்கை விடுக்கும்.
குற்றவாளிகளை விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். 400க்கும் மேற்பட்டோரை ஏற்கனவே கைது செய்துள்ளோம். இது குறித்து பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: மோடி, யோகி மீது விமர்சனம் வைத்த ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!