கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அக்ஹாந்தா சீனிவாசமூர்த்தியின் உறவனரான நவீன் என்பவர் சிறுபான்மை மக்களை அவதூறாக குறிப்பிட்டு தனது முகநூலில் பதிவிட்டார்.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, உள்ளிட்ட கட்சியினர் அந்த பதிவை கண்டித்து நடத்திய போராட்டத்தில் சீனிவாசமூர்த்தியின் வீட்டை போராட்டக்காரர்களில் சிலர் தீயிட்டு கொளுத்தினர், மேலும் பொதுமக்கள், காவல் துறையினர் வாகனங்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதில் தீக்கிரையானது.
இந்த கலவரத்தில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர், மேலும் அப்பகுதியில் இருந்த கே.ஜி. ஹள்ளி காவல் நிலையமும் கடுமையாக தாக்கப்பட்டது.
இதனால் கலவரத்திற்கு காரணமாக கருதப்பட்ட நவீன் குமாரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நவீன் குமார் தரப்பில் கூறுகையில், நவீனின் கருத்துக்கள் சமூகம் தொடர்புடையது. அதேபோல் அவருக்கு எதிரான ஆதாரங்கள் மின்னணு தொடர்பானவை என்பதால், அவர் வெளியே வந்தாலும் ஆதாரங்களை அழிக்க முடியாது. அதனால் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்றனர்.
இதனைத்தொடர்ந்து அரசு தரப்பில் கூறுகையில், 2007ஆம் ஆண்டு முதல் நவீன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்றனர்.
பின்னர் நீதிபதிகள், அரசு தரப்பு நவீன் குமாருக்கு எதிராக முதன்மையான தகவல்களை வைத்ததுடன், கலவரம் தொடர்பாக கூறப்படும் குற்றம் தீவிரமானது என்பதால் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: இரண்டு நாள்களுக்குள் விசாரணை: டி.கே. சிவக்குமார் ஆஜராக சிபிஐ சம்மன்!