மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திலீப் கோஷ், “மாநிலத்தில் பொது அடைப்பை அமல்படுத்துவதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது” என குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கம் (லாக்டவுன்) இதுவரை ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை. பொதுமுடக்கத்தின் போது ஊரடங்கு விதிகள் கடுமையாக கடைப்பிடித்திருந்தால், இன்று ஒருவேளை பாதிப்புகள் குறைந்திருக்கும்.
ஆனால் மாநில அரசு ஒரு பொய்யான பின்பத்தை உருவாக்கி, மேற்கு வங்க மாநிலத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது போல் உலகிற்கு காட்டியது.
விளைவு, உண்மை வேறுமாதிரியாக உள்ளது. இதற்கிடையில், ஜூலை 31ஆம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கத்தை மாநில அரசு நீட்டித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மம்தா பானர்ஜி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹாவும் வலியுறுத்தினார். மேலும் அவர், “கடந்த காலங்களில் பொதுமுடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தி, ஊரடங்கு விதிகளை கடுமையாக கடைப்பிடிக்கவில்லை” என்றும் விமர்சித்தார்.
மேற்கு வங்கத்தில் வருகிற 30ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் புதன்கிழமை (ஜூன்24) முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஊரடங்கை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேற்கு வங்கத்தில் 15 ஆயிரத்து 648 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 606 ஆக உள்ளது. நேற்று (ஜூன்25) மட்டும் 475 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர். மேற்கூறிய புள்ளிவிவர தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பயண விவரங்களை குறித்துக் கொள்ளுங்கள்'- பினராயி விஜயன்