ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், பெரு நகரங்களில் இருந்த மக்கள் பலரும் தங்களது கிராமங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தது. இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒருநாள் ஊதியம் ரூ. 182இல் இருந்து ரூ. 202ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அளிக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், '' சராசரியாக 2.26 கோடி மக்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 114 சதவிகிதம் அதிகமாகும். கிட்டதட்ட 1.05 கோடி மக்களுக்கு இந்த மாதத்தில் தினசரி வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில், சராசரியாக 3.35 கோடி மக்களுக்கு தினசரி வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 1.74 கோடியை விட, இது 92 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மே மாதத்தில், சராசரியாக 2.51 கோடி மக்களுக்கு தினசரி வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1.45 கோடியை விட 73 சதவீதம் அதிகம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1.86 லட்சம் பஞ்சாயத்துகளில் உள்ளவர்களுக்கு ஜூலை 30 வரை வேலை கிடைத்ததுள்ளது. மொத்தமாக ஜூலை 30 வரை 9.24 கோடி மக்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 29 வரை இந்த திட்டத்தின் கீழ் ரூ.50,780 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாய கூலியைவிட குறைவாக இருக்கும் 100 நாள் வேலை ஊதியம்!