சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாட் சந்தையில் இருந்த, 158 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தடுப்புப் பணிகளும் சோதனைச் சாவடிகளும் அமைத்து, கட்டுப்பாட்டுப் பணிகள் மிக தீவிரமாகச் சென்று கொண்டிருப்பதாக, அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து நகர அரசாங்க அலுவலர் ஜாங் ஜி கூறியதாவது; 'மே 30ஆம் தேதிக்குப் பிறகு ஜின்ஃபாட் சந்தைக்கு அருகில் இருப்பவர்களும், அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களும் 14 நாட்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் குடியிருப்புப்பகுதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. உள்ளே வர, வெளியே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. சீனா ஏற்கனவே பெரும்பாலான வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் வெளிநாட்டு மக்கள் கூட, உள்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு இருக்க வேண்டும்.
மேலும் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் மூடப்படும். அதிக பாதிப்புள்ள பகுதிகளில் அனைத்தும் முடக்கப்படும்' எனத் தெரிவித்தார்.