கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. சுமார் மூன்று மாதங்களாகத் தொடரும் இந்த ஊடரங்கில், பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவில் சலூன் கடை, அழகு நிலையங்களை இன்று (ஜூன் 28) முதல் மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்களில் திருத்தம் செய்ய முன்பதிவு செய்யப்படுவது அவசியம். முடி வெட்டுதல், சாயமிடுதல், த்ரெட்டிங் போன்ற சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தோல் தொடர்பான சேவைகள், தாடி ட்ரிம் சேவைகளுக்கு அனுமதியில்லை.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், கடையின் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்களை உபயோகிக்க வேண்டும். ஒருவருக்கு பயன்படுத்திய துணியை மற்றொரு நபருக்கு பயன்படுத்தக்கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பை வரவேற்கும் முடி திருத்துபவர்கள், கட்டாயமாக பாதுகாப்பு வழிமுறைகளைப் பின் தொடருவோம் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து முடி திருத்துபவர் ஷாஹித் ஹுசேன் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் வெப்பநிலையை நாங்கள் பதிவு செய்வோம். மேலும், அவர்கள் கடைக்குள் நுழையும்போது கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம்செய்த பிறகுதான் அனுமதிக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு புதிய துண்டும் ஹேர்கட் இருக்கைத் துணியும் பயன்படுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா சலூன் மற்றும் பார்லர் சங்கத்தின் தலைவர் சோம்நாத் காஷித், "அரசின் அறிவிப்பால் 10 லட்சம் சலூன் கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், முடித்திருத்தம் மட்டும்தான் செய்ய வேண்டும், மற்ற சேவைகளுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு வேதனை அளிக்கிறது.
ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்ட முடி திருத்துபவர்கள் மூன்று மாதங்களாக வேலையின்றித் தவித்து வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து வகையான சேவைகளையும் செய்தால் மட்டுமே எங்களால் வருமானம் ஈட்ட முடியும். இல்லையென்றால் அரசு தரப்பில் நிதியுதவி செய்ய வேண்டும். அரசின் உதவி கிடைக்காவிட்டால் தற்போது முடி திருத்தத்திற்கு தற்போது வசூலித்து வரும் 100 ரூபாயை 170 ரூபாயாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிபிஇ கிட், முகக் கவசம் அணிந்து பணியாற்றும் சலூன் ஊழியர்கள்