இந்தியா - வங்க தேச அணிகள் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இப்போட்டியின் மூலம் இரு அணிகளும் முதன்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றன.
இதனால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போட்டியின் தொடக்க விழாவிற்கு வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் வரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 2ஆவது போட்டியைக் காண கொல்கத்தா வந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் போட்டியைக் காண மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவல்துறையினர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் ப. சிதம்பரத்திடம் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை!