கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் வெளியாகும் தினசரி மலையாள பத்திரிகையின் முதன்மை நிருபராக பணியாற்றி வந்தவர் முகமது பஷீர். இவர் சனிக்கிழமை அதிகாலையில் (ஆக.3) திருவனந்தபுரம் மியூசியம் சாலையில் சென்று கொண்டிருக்கையில், ஐஏஎஸ் அலுவலர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஒட்டிவந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுபோதையில் காரை அதிவேமாக ஒட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த ஸ்ரீராம் வெங்கட்ராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறை வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தது. பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின்பேரில் ஸ்ரீராம் வெங்கட்ராமன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் டாம் ஜோஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஸ்ரீராம் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீராம் வெங்கட்ராமன் விபத்து நிகழ்த்தியபோது காவல் துறையினர் அவர் மீது மது அருந்தியிருந்தாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ரத்த பரிசோதனையில் அவர் மது அருந்தியதாக தெரியவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.