உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் 2001ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்தத் தீர்பை எதிர்த்து சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்கவும், வழக்கை லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு விசாரணையை லக்னோ சிறப்பு நீதிமன்றம் துரிதப்படுத்தியது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்ட 32 பேரில் ஆறு பேர் இன்று தங்கள் வாக்குமூலத்தை அளிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
பாஜகவின் மூத்தத் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், சந்தோஷ் துபே, பவன் பாண்டே, காந்தி யாதவ், விஜய் பகதூர் சிங் ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் வேறொரு தேதியில் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய அனுமதி பெற்றுள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா: மூடப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலகம்!