பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரின் வாக்குமூலங்களை சிபிஐ நீதிமன்றம் சிஆர்பிசி 313பிரிவின் கீழ் பதிவு செய்துவருகிறது.
ராம் விலாஸ் வேதாந்தி உள்ளிட்ட சிலரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், எல்.கே. அத்வானி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோரின் வாக்குமூலங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பதிவு செய்யலாம் என சிறப்பு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக வியாழன் அன்று லல்லு சிங், கமலேஷ் திவாரி, ராச் சந்திரா காத்ரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது.
எல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய தயாராக இருக்கவேண்டும் எனவும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ்வின் உத்தரவுப்படி வீடியோ கான்ஃபரன்சிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், வாக்குமூலம் அளிக்காதவர்கள் நேரில் ஆஜராகத் தேவையில்லையென்றும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தை ஆகஸ்ட்31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.