கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இதில், விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் செயல்பட்டுவரும் பகுப்பாய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கின் காரணமாக விமானத் துறை பெரும் இழப்பை சந்தித்துவருகிறது.
விமான நிலையத்தை இயக்குபவர்களுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், விமான நிலைய சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தொடருவதால் மக்கள் அதிகளவில் பயணிக்கும் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இடையேயான உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு ஆறு முதல் எட்டு காலாண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. கிரிசில் போக்குவரத்து, தளவாடங்களுக்கான இயக்குநரும் பயிற்சித் தலைவருமான ஜெகநாராயண் பத்மநாபன் கூறுகையில், "மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காலத்திற்குப் பிறகும் ஊரடங்கை நீட்டித்தால் மொத்த இழப்புகள் அதிகரிக்கும்.
செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும்போது, ஒட்டுமொத்த செயல்பாட்டு திறன் நடப்பு நிதியாண்டில் 50 முதல் 60 விழுக்காடாக உயரும். ஊரடங்கின் காரணமாக தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு இரண்டாயிரத்து 200 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது." எனக் கூறினார்.
இதையும் பார்க்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி