சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் (பாஜக), நயா ராய்ப்பூர் பகுதிக்கு 'அடல் நகர்' என பெயர் மாற்றம் செய்தார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஞாபகமாக அப்பகுதிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
ராய்ப்பூருக்கு பதிலாக அடல் நகரை சத்தீஸ்கரின் தலைநகராக மாற்றும் முயற்சி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், மீண்டும் நயா ராய்ப்பூர் என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதனால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நயா ராய்ப்பூருக்கு ‘அடல் நகர்’ என பெயர் சூட்டப்பட்டது. டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் முதலமைச்சராக பதவியேற்றார் காங்கிரசைச் சேர்ந்த பூபேஷ் பாகல். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 27 மாவட்ட தலைமை அலுவலங்களிலும் வாஜ்பாய் சிலையை நிறுவி, அடல் நகரை தலைநகராக மாற்றுவது பாஜக அரசின் எண்ணமாக இருந்தது. அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ‘அடல் நகர்’ பெயரையே மாற்றிவிட்டது காங்கிரஸ் அரசு.