தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்பட்டு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபித்தால் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களாகத் தகுதிபெறாதவர்களை தங்கவைப்பதற்காக, அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்தில் ஆண்களுக்கு 13, பெண்களுக்கு இரண்டு நான்கு மாடி கட்டடம் என, மொத்தம் 15 கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 2019 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஜாகிர் கூறுகையில்,
இரண்டு லட்சத்து 88 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. இங்கு தனித்தனி கழிப்பறைகள், மருத்துவமனை, சமையலறை, சாப்பாட்டு அறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அலுவலர்களுக்கு தனித்தனி குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட்டுவருகின்றன என்றார்.