அஸ்ஸாம் மாநிலத்தின் சிப்சாகர் மாவட்டத்தில் நங்லமோரகாட் பகுதியிலிருக்கும் தேசாங் ஆறானது காலை 9 மணியளவில் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதாக மத்திய வெள்ள கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து மத்திய வெள்ள கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட அறிக்கையில், “தேசாங் ஆறு காலை 9 மணியளவில், 62.32 மீட்டர் மட்டத்தில் 0.10 மீ உயரத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது. இது ஆபத்து நிலையைவிட அதிகரித்துள்ளது.
முன்பு, ஆறானது 64.1 மீட்டர் மட்டத்தை எட்டியபோது வெள்ளம் ஏற்பட்டது. இது தவிர, தன்சிரி, பிரம்மபுத்திரா, ஜியாபராலி ஆறுகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருந்தது என மாநில அரசுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
சமீபத்தில் ஏற்பட்ட அஸ்ஸாம் வெள்ளத்தில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர் பகுதிகள் சேதமாகியுள்ளன. இதுமட்டுமின்றி பிகாரில் உள்ள பாகமதி ஆற்றிலும், கந்தக் ஆற்றிலும் நீர் நிரம்பியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனாவால் அஸ்ஸாம் மாநிலம் தவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெள்ளம் ஏற்பட்டு மீண்டும் பெரும் துயரை அப்பகுதி மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.