அசாம் மாநிலத்தில் பெய்துவரும் அதிதீவிர மழையால் மாநிலத்தில் உள்ள தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத், உதல்கிரி, தாரங், நல்பாரி, பார்பேட்டா உள்ளிட்ட 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாவட்டங்களில் இடைவிடாத மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மொத்தம் 99 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திப்ருகார் நகரம் கடந்த நான்கு நாள்களாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரத்து 289 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 37 ஆயிரத்து 313.46 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் 132 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 19 ஆயிரத்து 496 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக , பல்வேறு இடங்களில் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.