நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளின் திட்டத்தை முறியடித்து ஆட்சி அரியணையை தக்கவைக்க வேண்டுமென்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
இதற்கிடையே இந்தத் தேர்தலில் வெல்வதற்காக பாஜக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மேலும், பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் சமீபத்தில், “2024ஆம் ஆண்டு தேர்தலே நடக்காது” என பேசியிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் மக்கள் மீண்டும் மோடியை பிரதமராக அமர்த்தினால், இனிமேல் தேசத்தில் தேர்தலே நடக்காது.
ரஷியா, சீனாவில் என்ன நடந்ததோ அதை நோக்கி தேசம் செல்லும். தேசத்தில் ஒரு கட்சி, ஒரு கொள்கை, விதிமுறைகள் மட்டுமே இருக்கும். யார் குடியரசுத்தலைவராக வர வேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்” என்றார்.