கரோனா வைரஸ் பரவும் இக்கட்டான சூழ்நிலையிலும் அயராது உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களை பாராட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வைரஸைக் காட்டிலும் அச்சம், தவறான தகவல் பரப்புவுது ஆகியவையே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆனால், கரோனா வைரஸ் ஆபத்துகள், அது பரவும் விதம் குறித்து மக்களுக்குத் தெளிவாக அறிவுறுத்துவதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஏ.என்.எம் ஊழியர்கள் அனைவரும் மிகவும் துணிச்சலாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் உயிரைப் பணயம் வைத்து கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாகத் திகழ்கிறார்கள்.
இந்த அவசியமான நேரத்தில் தேசத்துக்குச் சேவை செய்வதுதான் உண்மையான தேசபக்தி. அந்த வகையில், இந்த மோசமான நெருக்கடிக்கு மத்தியில் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க அயராது உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களே "உண்மையான தேச பக்தர்கள்" ஆவர்.
இவர்கள் அனைவரும் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல், மக்களுக்கு அறியப்படாத ஹீரோக்களாகவே திகழ்கின்றனர். இந்த தேசத்துக்குச் சேவை செய்யும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளர்களை நான் வணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினர்கள் இந்தப் பெருந்தொற்றில் சிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரசை கட்டுப்படுத்த களத்திலிறங்கும் ஸ்மார்ட் சிட்டிகள்!