பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் அடுத்த சில நாள்களில் வெளியாகவுள்ளன. பிகார் தேர்தலில் 16 விழுக்காடு வாக்கு வங்கியுடன், 40 தனித்தொகுதிகளும் தலித் சமூக மக்கள் வசம் உள்ளது. அந்த மாநிலத்தில் தலித் தலைவராக ராம் விலாஸ் பஸ்வான் மட்டும் இல்லை, முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி மற்றும் பாஜக, ராஷ்டீரிய ஜனதா தளத்திலும் மக்களுக்கு பரீட்சயப்பட்ட தலித் தலைவர்கள் உள்ளனர்.
பிகார் மாநிலத்தில் தலித் வாக்குகள் 16 விழுக்காடு உள்ளதால், ஒவ்வொரு தேர்தலின்போது அரசியல்கட்சிகள் இந்த வாக்குகளை கைப்பற்ற தனிக்கவனம் செலுத்தும். மேலும் பிகாரில் தலித் பட்டியலில் 22 சமூகங்கள் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் மகா தலித் இயக்கம் செயல்பட்டுவருகிறது. மாநிலத்தில் செல்வாக்கு மிக்க தலித் தலைவராக ஜிதன் ராம் மஞ்சி அறியப்படுகிறார்.
இவர் எட்டு மாதங்கள் பிகார் மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். ராம் விலாஸ் பஸ்வானை பொறுத்தமட்டில் அவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் முக்கிய தலைவராக அறியப்படுகிறார். ராஷ்டீரிய ஜனதா தளத்திலும் மக்களுக்கு பரீட்சயமான தலித் தலைவர்கள் உள்ளனர். அக்கட்சியின் தலித் தலைவர்களான ராமை ராம், ரவிதாஸ் கூறுகையில், “நிதிஷ் குமார் தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலித் மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றனர்.
மேலும், “ராஷ்டீரிய ஜனதா தளம் சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் வாக்குகளும் எங்களுக்கு ஆதரவாக உள்ளன” என்றும் அவர்கள் கூறினார்கள். மற்றொரு பக்கம் வரலாற்றின் பக்கங்களை திருப்பி பார்த்தோமானால், ஜமீன்தாரி முறையை ஒழித்த முதல் மாநிலம் பிகார்தான். ஆனாலும் சமூகத்தின் கதவுகள் தலித்துக்களாக திறக்கவில்லை.
அந்நிலை தற்போதும் தொடர்கிறது. இதற்கிடையில் 1960ஆம் ஆண்டுகளில் போலா பஸ்வான் சாஸ்திரி முதலமைச்சராக வந்தார். இவர்தான் நாட்டின் முதல் தலித் முதலமைச்சர் ஆவார்.
அதன்பின்னர் 1977 ஆம் ஆண்டில், பிகார் மாநிலத்தின் பாபு ஜெகஜீவன் ராம் நாட்டின் துணைப் பிரதமரானார். ஆயினும்கூட, பிகார் பட்டியல் சாதியினரின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்திய காலங்களில் தொழிலாளர்களின் பிரச்னை மாநிலத்தில் தலித் இயக்கத்திற்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. பிகாரில் தலித் வாக்காளர்களை அணிதிரட்டுவது தொழிலாளர்களின் பிரச்னை, வேலைவாய்ப்பு போன்ற பொருளாதார அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இது எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பிரதிபலிக்கலாம்.
இதையும் படிங்க: நெருங்கும் பிகார் தேர்தல்; சூடுபிடிக்குமா புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை!