கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களின் பயண தூரத்தைச் சுருக்கும் வண்ணம் உத்தரகண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலேக் என்ற சீன எல்லைப் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.
இந்நிலையில், லிப்புலேக் பகுதி தங்கள் எல்லைக்கு உட்பட்டது என்றும், இதுபோன்ற ஊடுருவல் வேலையில் இந்தியா ஈடுபடுவதை நிறுத்துக்கொள்ளுமாறும் அண்டை நாடான நேபாள அரசு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக, இந்தியா-நேபாளத்துக்கு இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இதனிடையே, கலபானி, லிப்புலேக் பகுதிகள் நேபாள எல்லைக்கோட்டுக்கு உள்ளே இருப்பது போன்ற வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடம் சர்ச்சையைப் பற்றவைத்துள்ள சூழலில், நேபாள அரசின் நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளை நேபாள எல்லைக்குட்பட்ட பகுதிகளாகச் சித்தரித்து அந்நாட்டு அரசு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தன்னிச்சையான முடிவுக்கு வரலாற்றுச் சான்றுகளோ, ஆதரங்களோ இல்லை. எல்லைப் பிரச்னை குறித்து இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ள புரிதலுக்கு மாறாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. செயற்கையான எல்லை விரிவாக்க நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இந்தியாவின் நிலைப்பாட்டை நேபாள அரசு நன்கு அறியும். இந்தியாவின் இறையாண்மையை மதித்து இதுபோன்ற ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நேபாளம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து நேபாள அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க : இந்தியா-நேபாளம் மோதலும், சீனாவின் தலையீடும்