ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், ஜம்மு - காஷ்மீர் எம்பிக்களும் எதிர்க்கட்சி எம்பிக்களும் மசோதா நகல்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் காஷ்யப் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அரசியலமைப்பு சட்டப்பிரிவின் XXIஇல் மூன்று விதிகள் உள்ளன. அவை தற்காலிக, இடைக்கால, சிறப்பு விதிகள்.
சட்டப்பிரிவு 370இன் தலைப்பே இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டப்பிரிவு ஒரு சிறப்பு ஏற்பாடு அல்ல என்பதையும் விளக்குகிறது.
எனவே, இச்சட்டம் காஷ்மீருக்கு தற்காலிக தகுதியை வழங்குகிறது. இது ஒரு தற்காலிக சட்டமாக இருப்பதால் சட்டப்பிரிவு 370-ஐ திருத்த முடியும் என்று அரசு நம்புகிறது "எனக் கூறினார்.
370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறுவதே தவறு என்று குறிப்பிட்ட காஷ்யப், அரசியலமைப்பின் அனைத்து சட்டப்பிரிவையும் சட்டப்பிரிவு எண் 368இன் கீழ் நாடாளுமன்றத்தால் திருத்த முடியும் என சுட்டிக்காட்டினார். 370ஆவது பிரிவை மாற்றிய பின்னர், அரசு 368ஆவது பிரிவின் விதிகளை ஜம்மு-காஷ்மீருக்கு நீட்டிக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
மேலும், சட்டப்பிரிவு 35ஏ ரத்து செய்யப்படுமா என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின்னர் சட்டப்பிரிவு 35ஏ ரத்து செய்யப்படுவது இயல்பானது என்று தெரிவித்தார்.