புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ’எல்லோரா நுண்கலை அமைப்பு’ என்ற ஒரு குழுவை அமைத்துள்ளனர். அதன் தலைவராக ஓவியர் முனுசாமி என்பவர் இருந்துவருகிறார். இக்குழுவில் முன்னாள் பள்ளி நண்பர்களும் இணைந்துள்ளார்கள்.
இந்தக் குழுவின் மூலம் புதுச்சேரியில் மதகடிப்பட்டு, வில்லியனூர் வீராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பாழடைந்து பொலிவிழந்து காணப்படும் பள்ளிகளைத் தேர்வுசெய்து, அதனை தூய்மைபடுத்தும் நோக்கிலும், மாணவர்களிடையே ஓவியத் திறமையை ஊக்குவிக்கவும் அழகான வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
ஓவியத்தால் சுவர் புதுப்பொலிவு பெறுவதுடன், பள்ளி சுவர்களில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களும் தடுக்கப்படுகிறது. அதன் சுற்றுப் பகுதியும் தூய்மை அடைகிறது. ஓவிய ஆசிரியர்களின் இந்த செயலுக்கு கிராமப் பகுதி மக்கள் இவர்களைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
காசு முக்கியமல்ல கலை தான் முக்கியம்!
அரசுப் பள்ளிகளில் மதில் சுவற்றில் சித்திரம் வரைவது தங்களுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவதாகத் தெரிவிக்கின்றார், காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி நுண்கலை ஆசிரியர் லிங்கா.
சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் சுவர்களில் ஓவியங்கள் வரைவதை சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செய்துவருகின்றனர். இதற்காக எந்தவித ஊதியமும், அன்பளிப்பும் இவர்கள் பெறுவதில்லை.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபர்கள் வரைந்த சுவர் ஓவியத்திற்கு வரவேற்பு