காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர். இவர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், `வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும்.
பாஜக புதிய அரசியலமைப்பை எழுதி உருவாக்குவார்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துப் பேசினார். இதற்கு, பாஜக கண்டனம் தெரிவித்தது. கட்சி மேலிடமும் சசி தரூரை அழைத்து, `பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்' என்று அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி என்பவர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் சசி தரூரின் கருத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 13ஆம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் முன் சசி தரூர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சசி தரூர் சார்பில் யாரும் ஆஜராகாததால், அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.