சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த தினத்தில் சகோதரர்களின் கைகளில் வண்ண நிறங்களால் ஆன ராக்கிக் கயிறுகளை சகோதரிகள் பாசத்துடன் கட்டுவது வழக்கம். நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் அருகே இந்தியா-திபெத் எல்லைக் காவல்படையைச் (The Indo-Tibetan Border Police- ITBP) சேர்ந்த ராணுவ வீரர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகையை பள்ளிக் குழந்தைகளுடன் நேற்று கொண்டாடினர். அப்போது பள்ளிக் குழந்தைகள், ராணுவ வீரர்களின் கைகளில் ராக்கி கட்டியும், நெற்றியில் திலகமிட்டும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளிக் குழந்தைகள் கூறும்போது, ‘ராணுவ வீரர்கள் நம் அனைவரையும் காப்பதற்காக அவர்களது வீட்டைவிட்டு வெளியே இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் ரக்ஷா பந்தன் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி’ என்றனர்.
அதைத் தொடர்ந்து இந்தியா-திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த ராணுவ வீரர் குல்சைன் சிங் கூறுகையில், ‘பள்ளிக் குழந்தைகள் எங்கள் கைகளில் ராக்கி அணிவித்தபோது நாங்கள் வீட்டிலிருப்பது போன்று உணர்ந்தோம்’ என்று கூறினார்.