நாடு முழுவதும் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதனையடுத்து நரேந்திர மோடி இந்திய பிரதமராக இரண்டாவது முறை 30ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றைய தினமே கேபினெட் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து புதிய மக்களவை ஜூன் 17ஆம் தேதி கூடுகிறது. மேலும் ஜூன் 20ஆம் தேதி மாநிலங்களவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் புதிய மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய எம்.பி.க்களுக்கு இவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும், சபாநாயகருக்கான தேர்தலையும் இவரே நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.