நாட்டின் 18 மாநிலங்களில் உள்ள 91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆந்திர சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் ராவ் இன்று குண்டூரின் இனுமெட்லா கிராமத்தில் உள்ள சட்டேனபள்ளி தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றார். அப்போது ஆளும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுக்கும் ஜெகன் மேகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில், கொடேலா சிவபிரசாத் ராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த காவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.