ஏழை, எளியோர் பசியாறும்விதமாக தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 'அம்மா உணவகம்' தொடங்கினார். அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் கடந்த ஆட்சியின்போது 'அண்ணா உணவகம்' தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் உணவு உண்டு பசியாறிவந்தனர். இங்கு ஒரு தட்டு உணவின் விலை ரூ.5 ஆகும்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. குறிப்பாக, ஜெகன்மோகனின் செயல்பாடு சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தும், அவர் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதற்கேற்றாற்போல், அங்கு செயல்பட்டுவந்த ஏழை, எளியோரின் அண்ணா உணவகங்கள் நேற்று முதல் திடீரென மூடப்பட்டன. இந்த உணவகத்திற்கு நாள்தோறும் வருபவர்கள் மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றுத்துடனும் வேதனையுடனம் திரும்பிச் செல்கின்றனர்.
அண்ணா உணவகம் ஏன் மூடல்?
அண்ணா உணவகங்களின் ஒப்பந்தக் காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தை அரசு மீண்டும் புதுப்பிக்காததால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சந்திரபாபுவின் கண்டனமும்... ஜெகன்மோகனின் பதிலடியும்...
இந்நிலையில், பழிவாங்கும் அரசியலுக்காக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதா? என்று சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்ததற்கு, உணவக கட்டடங்களில் ஊழல் நடந்திருப்பதாகவும் மேலும், உயர் தரத்துடன் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.