ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 இடங்களிலும், மக்களவைத் தொகுதியில் 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளதால், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலும், மே 30ஆம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
ராஜினாமா கடிதத்தை அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கும், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் வாழ்த்துக்கள், என்றார்.
பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இதற்காக ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் என பலரையும் அவர் தொடர்ந்து சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.