கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்துவருகிறது. அதிலும் ஆந்திரா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டை விட இந்த வருடம் 105 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று அதிகம் வீசுவதால் நகர மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வெயிலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள் குளிர்பானங்களைத் தேடி அலைகின்றனர். மக்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மண்பானையை வாங்கி தண்ணீர் நிரப்பி குடித்து தாகம் தீர்க்கின்றார்கள்
இருந்தாலும் நாளுக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த சத்யநாராயணன் என்பவர், கடந்த 15 வருடங்களாக தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு சேவையாற்றிவருகிறார். கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிரிக்கும் என்பதால் தண்ணீர், மோர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கிவருகிறார். அதோடு, பேருந்தில் பசியோடு பயணிக்கும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிவருகிறார். மேலும், இவரது சமூக சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
சத்யநாராயணனின் கொடை உள்ளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. ஆந்திராவில் அடிக்கும் கடும் வெயிலின் தாக்கத்திற்கு நேற்று முன்தினம் ஆறு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.