ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள பொச்சம்மா கோயிலில் இருந்து பாபிகொண்டாலு என்ற பகுதிக்கு படகின் மூலம் சுற்றுலாப் பயணிகள் 72 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கச்சுலுரு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த படகு யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில், உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்த 25க்கும் மேற்பட்டோர் நீந்தி கரை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நீரில் முழ்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், 2 ஹெலிகாப்டர்களும் 6 படகுகளும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவரை, நீரில் மூழ்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடங்களை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பேரிடர் குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.