மக்கள் மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவர் ஜுனைத் மட்டு ஸ்ரீநகர் மாநகராட்சியின் மேயராக இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் துணை மேயர் ஷேக் இம்ரான் தோல்வியைத் தழுவியுள்ளார். இது குறித்து மட்டு கூறுகையில், "2018ஆம் ஆண்டு, முதல்முறையாக வெற்றிபெற்றேன். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தேன். இன்று, மீண்டும் பெரும்பான்மைக்கு மிக அருகில் வெற்றிபெற்றுள்ளேன். பதிவான மொத்த வாக்குகளில் 44 வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.
என் மீது நம்பிக்கை வைத்து கவுன்சிலர்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்வேன்" என்றார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த ஷேக் இம்ரானின் ஆதரவாளர்கள், ஜனநாயகம் படுகொலைசெய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து இம்ரானின் ஆதரவாளரும் கவுன்சிலருமான அக்விப் ரென்சோ கூறுகையில், "தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனக் கூறி வாக்குப்பதிவு மையத்தில் போராட்டத்தில் குதித்த கவுன்சிலர்கள் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நியமனம் செய்யவே விரும்புகிறார்கள். தேர்தலை நடத்த விருப்பமில்லை. இது ஜனநாயகப் படுகொலை" என்றார்.