மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் தாதர் பகுதியில் உள்ள ராஜ்குருவில் அமைந்துள்ள அம்பேத்கரின் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை(ஜூலை 7) இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களும் தொட்டிச் செடிகளும் சேதம் அடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அம்பேத்கர் வீட்டின் மீது கல் எறிவதும்; பின் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்புவதும் பதிவாகி இருந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாதுங்கா காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் தாதர் பகுதியை அடுத்துள்ள இந்து காலனியில் அமைந்துள்ள இந்த வீடு அம்பேத்கர் அருங்காட்சியகமாக உள்ளது. இங்கு அம்பேத்கரின் புத்தகங்கள், உருவப்படம், அஸ்தி உள்ளிட்டவை பாதுகாக்கப்படுகின்றன.
இந்த வீட்டில் தற்போது அம்பேத்கரின் மருமகளும் அவரது பேரனும் வஞ்சித் பகுஜன் அகாதி அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர், ஆனந்த் ராவ், பீம்ராவ் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அமைதி காக்குமாறு பிரகாஷ் அம்பேத்கர், தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.