கர்ப்பிணி யானை இறந்த விவகாரத்தில், உடனடியாக வனத்துறை செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, காயம்பட்ட யானையைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள வனத்துறை விளக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுரேந்திர குமார் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், 'காயம்பட்ட யானையை மீட்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
வனத்தைவிட்டு அந்த காட்டுயானை மே 23ஆம் தேதி வெளியே வந்தது. வனத்துறை அலுவலர்கள் சில முயற்சிகள் எடுத்து அதே நாளில் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டினர். அதே யானை மே 25ஆம் தேதி வெள்ளியாறு நதியில் வந்து நின்றபோதுதான் யானைக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது எனப் புரிந்தது.
உடனடியாக, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, தூரத்திலிருந்து யானைக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் யானையின் உடல் மோசமாகவுள்ளது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அப்போது யானை ஆற்றுக்குள் நின்றிருந்ததால், உடனடியாக அதனை மீட்டு சிகிச்சையளிப்பதிலும் சிரமம் இருந்தது.
பாலக்காட்டிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காயம்பட்ட யானையை மீட்க முயற்சி செய்தோம். ஆனால், முயற்சி பலனளிக்காமல் மே 27ஆம் தேதி யானை உயிரிழந்தது. யானையை மீட்க உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறுவது சுத்தப்பொய்.
காயம்பட்ட யானை மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட யானை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காட்டுவிலங்குகளை மீட்பதற்கென்று சில நெறிமுறைகள் உள்ளன. அதைப்பின்பற்றி மீட்பு முயற்சிகள் நடைபெற்றன.
யானை உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்கும். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வனப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போதிய ஒத்துழைப்பை வனத்துறை அலுவலர்களுக்கு வழங்கவேண்டும்" என்றார்.