சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, அந்நாட்டைத் தாண்டி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. அதேபோல, இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், வைரஸ் தொற்று டெல்லியில் பரவாமல் இருக்க அம்மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, "மார்ச் 31ஆம் தேதி வரை டெல்லியிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளும் மூடப்படும்" என்று அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக டெல்லியிலுள்ள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் டெல்லி செல்ல அனுமதி