புதுச்சேரி வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் அருண், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்துகொண்டு, கரோன நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.
அப்போது பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், “கரோனா பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு தற்போது கரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு முழு பாதுகாப்பு உடை இன்னும் வழங்கவில்லை. அரசு விரைவில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு உடை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், “உலகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு உடையின் தேவை அதிகமாக உள்ளது. இருப்பினும் புதுச்சேரி அரசு, பாதுகாப்பு உடைகளை பெற முயற்சிகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினருக்கு என்95 ரக முகக்கவசம் வழங்கப்படும். அதன்பின் பாதுகாப்பு கவசம் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கரோனா கவச உடை தயாரிக்கும் பணியில் பின்னலாடை நிறுவனங்கள்