ஜூலை 27, 2019: காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி, காஷ்மீருக்குக் கூடுதலாக 100 கம்பெனி பாதுகாப்புப் படைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
ஆகஸ்ட் 1, 2019: காஷ்மீருக்கு கூடுதலாக 25,000 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2, 2019: காஷ்மீருக்கு வரும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது.
காஷ்மீரில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் காங்கிரசின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
ஆகஸ்ட் 3,2019: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, சட்டப் பிரிவு 35ஏ-வை நீர்த்துப்போகச் செய்யும் எந்த நடவடிக்கைக்கும் மத்திய அரசு முயலப்போவதில்லை என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.
யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதியே அவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுவதாகவும், அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படுவதாகவும் தெரிவித்த ஆளுநர் சத்ய பால், தேவையற்ற பதற்றத்தை உருவாக்காதீர்கள் என்று அரசியல் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 4, 2019: காஷ்மீரின் பல்வேறு பகுதியில் உள்ள முக்கிய பாதுகாப்புத் துறை வீரர்களுக்கு சாட்டிலைட் மொபைல் ஃபோன்கள் வழங்கப்பட்டன.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். காஷ்மீர் பிரிவினைவாதிகளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.
மாலை 6 மணிக்குக் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு முதல் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவை படிப்படியாகத் துண்டிக்கப்பட்டது.
தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, காங்கிரசின் உஸ்மான் மஜித் ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 5, 2019: அதிகாலை முதல் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம்: காஷ்மீரில் நிலவிவரும் பதற்ற நிலை குறித்து விளக்கவேண்டும் என்று காங்கிரசின் குலாம் நபி ஆசாத் பேசுகையில் குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் தொடர்பாக நான்கு மசோதாக்களைத் தாக்கல் செய்தார்.
அதில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டன.