மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக அந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த சட்டத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்பினர் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக அரசுக்கு எதிராகவும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடைபெறும்போது, போராட்டத்தை முடிக்க சொல்லியும் தீப்பந்தங்களை அணைக்கவும் காவலர்கள் முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவில்லையென்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அச்சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுக எம்பி கோகுல கிருஷ்ணன் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்றும் அனைத்து ஜனநாய அமைப்பினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!