கரோனா வைரஸ் எதிரொலியாக முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவையடுத்து புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் பிரசித்திப்பெற்ற கோயில்களில் நடைபெறும் பூஜைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மசூதிகளிலும் மக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடுவார்கள் என்பதால் சிறப்புத் திருப்பலியைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள பிஷப் ஹவுசில் உயர் மறைமாவட்ட பேராயரை நேரில் சந்தித்து கோரிக்கைவைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட பேராயர் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்புத் திருப்பலிகளில் கிறிஸ்தவ அன்பர்கள் கூடுவது தவிர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனையடுத்து கிறிஸ்தவர்கள் வருகிற 31ஆம் தேதி வரை பேராலயங்களில் நடைபெறும் சிலுவைப்பாதை, தவக்கால தியானங்கள், தவ நாள்கள் சிறப்புத் திருப்பலிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் அறிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை