லக்னோ : ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பணம் கொடுத்து சரி செய்திடுவோமென பாஜக எம்.பி., ஆணவத்தில் பேசிய பேச்சு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் ஆரவரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அப்பெண்ணை சிலர் மீட்டனர்.
பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் சந்திக்கவிடாமல் தடைவிதித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச அரசின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்களின் மனக் கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில், ஹத்ராஸைச் சேர்ந்த பாஜக எம்.பி., ராஜ்வீர் சிங் டைலரின் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில் மும்பையின் கீதா நகரில் இயங்கிவரும் வால்மீகி சமாஜை சேர்ந்தவரென ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தி, பாஜக எம்.பி., ராஜ்வீர் சிங்கிடம் பேசத் தொடங்குகிறார். கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ராஜ்வீரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் பாஜக எம்.பி., ராஜ்வீர் சிங், "அந்த விவகாரம் முழுமையாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ .25 லட்சம் நிதியும், ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவரின் சகோதரருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், சிறுமி திரும்பி வரப் போவதில்லை. பாதிக்கப்பட்டவரின் உடலை எரித்தும்விட்டனர். எனவே, இந்த விவகாரத்தை இத்துடன் விடுவதே நல்லது" என சர்வ சாதாரணமாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.