மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "வங்கி ஊழல் தொடர்பான வழக்கில் நான் சிக்கியதிலிருந்து அஜித் பவார் அமைதியற்று இருந்தார்.
கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இல்லாத என் பெயர் இந்த வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக சேர்க்கப்பட்டதாக அவர் குடும்பத்தாரிடம் வருத்தமாகப் பேசியுள்ளார். அரசியலை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கவுள்ளதாக அஜித் பவார் தன் மகனிடம் தெரிவித்துள்ளார். இதனை அவர் மகன் என்னிடம் தெரிவித்தார். அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து என்னிடம் முன்னதாகத் தெரிவிக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் பிரச்னை இல்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.