மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில், சிவசேனாவுடன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ளன.
அம்மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ள நிலையில், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவி வகிக்கிறார்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இணையாக மும்பை உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிர்ஹான் மும்பை முனிசிபல் கார்ப்பொரேஷன் (பி.எம்.சி) தேர்தல் என்ற இந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலுக்கு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என துணை முதலமைச்சரான அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார். தற்போது மும்பையில் முதலிடத்தில் இருக்கும் சிவசேனா நமது கூட்டணி கட்சியாக இருந்தாலும், நாம் விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டு நமது எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனத் தொண்டர்களிடம் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
கடந்த பி.எம்.சி. தேர்தலில்படி மொத்தமுள்ள 227 இடங்களில் 92 இடங்கள் சிவசேனாவிடமும், 30 இடங்கள் காங்கிரசிடமும், ஒன்பது இடங்கள் தேசியவாத காங்கிரசிடமும் உள்ளன.
இதையும் படிங்க: 'நாட்டில் அமைதியை நிலைநாட்ட தகுதிக்குட்பட்டதைச் செய்யத் தயார்!' - ரஜினிகாந்த்