இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் காற்று மாசால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தெற்காசியாவிலேயே இந்தியாவின் வட மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசால் மக்களின் சராசரி ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைந்துள்ளதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்று தர உடல்நலக் குறியீட்டு (AQLI) குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ”உலகில் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாட்டில் மிகவும் மாசுபட்ட மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும், உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாமிடத்திலும் உள்ளன.
இதனால் டெல்லியில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 9.4 ஆண்டுகளாகவும், உத்தரப் பிரதேசத்தில் 8.6 ஆண்டுகளாகவும் குறைந்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத வகையில் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர்.
காற்று மாசின் தரக்குறியீடு அளவு தொடர்ந்து மோசமாக நீடித்தால் வட இந்தியாவில் வசிக்கும் 24.8 கோடி மக்களின் ஆயுட்காலம் எட்டு ஆண்டுகளுக்கு மேல் குறைந்துவிடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.