இந்தியாவில் தீவிரமடைந்து வந்த உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் மூலமாக தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக பயண விமான நடவடிக்கைகளும் ஊரடங்கு காலத்தையொட்டி நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு மாதம் கடந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் இந்த முன்னெடுப்புகள் மத்திய வெளியுறவுத் துறையின் ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் இந்திய அரசின் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, இந்த வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக உள்நாட்டு பயணிகள் விமான சேவைகளைத் தொடங்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள், தங்களது சொந்த மாநிலங்களை அடைய போக்குவரத்து தேவைப்படும் என்பதால் இந்த விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய பயணிகளுக்காக மட்டுமே இந்த சிறப்பு விமானப் போக்குவரத்து இயக்கப்படும் என்பது கூடுதல் தகவல். வந்தே பாரத் திட்டத்திற்காக ஏர் இந்தியா 12 நாடுகளுக்கு 64 விமானங்களை இயக்கி, 14,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்து வந்துள்ளது.
இதையும் படிங்க : கோவிட் -19க்கு எதிரான போராட்டத்திற்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் அறக்கட்டளை ரூ. 3100 கோடி ஒதுக்கீடு - பிரதமர் அலுவலகம்