டெல்லி: முந்தைய நிதியாண்டில் (2019-20) ஏர் இந்தியாவிற்கு ரூ.3,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால், "ஏர் இந்தியா நிறுவனம் முந்தைய நிதியாண்டில் (2019-20), சுமார் ரூ.3,600 கோடி ரொக்க இழப்பைச் சந்தித்துள்ளது.
இது 2018-19ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.8,556.35 கோடி நிகர இழப்பை ஏர் இந்தியா சந்தித்தது.
ஒவ்வொரு காலாண்டிலும் எங்கள் நிறுவனம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முதல் காலாண்டைவிட, இரண்டாவது காலாண்டு சிறப்பாக இருந்தது. இது ஒரு நல்ல போக்குவரத்து பருவமாகும்.
கரோனா ஊரடங்கின்போது பல்வேறு இடங்களுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏராளமான சர்வதேச போக்குவரத்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கிடைத்தது" என்றார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் வந்தே பாரத் திட்டத்தின்கீழ், பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த சுமார் 4.2 மில்லியன் பயணிகள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டதாகவும், இதில், ஏர் இந்தியாவின் மூலம் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் பயணித்ததாகவும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இதற்கான அடுத்த சுற்று ஏலம் 2021 ஜனவரி 5ஆம் தேதிமுதல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) தலைவர் அரவிந்த் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன் இருக்கையில் அமர்பவர்களுக்கு கட்டாய ஏர்பேக் - பொருளாதார நிபுணர்களின் கருத்து என்ன?