நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதிச் சுமையில் சிக்கித் தவிப்பதால் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அரசின் இம்முடிவு தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தினேஷ் திரிவேதி கேள்வி எழுப்பினார்.
இந்த கரோனா பாதிப்பு காலத்தில் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலரை மீட்டுவர உதவிய ஏர் இந்தியாவை அரசு கைவிட முயற்சிப்பது முறையா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பெரும் நிதிச் சுமையில் சிக்கியுள்ளது. இதை தனியாருக்கு விற்பதா அல்ல வைத்துக் கொள்வதா என்பது தற்போது விவாதத்தில் இல்லை.
ஒன்று ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது இழுத்து மூட வேண்டும் என்பதே கள யதார்த்தம். அதேவேளை நிறுவனத்தை வாங்கும் புதிய உரிமையாளர் சிறப்பாக அதை நடத்தி உயரத்துக்கு கொண்டுசெல்லும் என அரசு நம்புகிறது" என்றார்.
இதையும் படிங்க: செல்ஃபி மோகத்தில் இரண்டரை வயது மகனை கடல் அலையில் தவறவிட்ட தாய்!