கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனம் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், மருந்துப் பொருள்களை நாட்டிற்கு எடுத்துவரவும் உதவிபுரிந்துவந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தங்களது பணியாளர்கள் குழுக்களை ஊரடங்கு முடிவதற்குள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், விமானங்களை ஊரடங்கிற்குப் பிறகு (மே 3ஆம் தேதிக்குப் பிறகு) இயக்க தயார் நிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்கள் தங்களது விவரங்களை விரைந்து அளிப்பதன் மூலம் அவர்கள் பணியில் சேர பயணிப்பதற்கான முன் அனுமதியினை பெறவும், உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணத்திற்கு அனுமதிக்கவும் அனுமதி பெற ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கான படிவங்களும் பயணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியது.
இது குறித்து பேசிய ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர், மே மூன்றாம் தேதிக்குப் பிறகு விமானங்களை இயக்கவிருப்பதாகவும், அநேகமாக மே மாதத்தின் நடுப்பகுதியில் விமான சேவைத் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 25 முதல் 30 விழுக்காடு விமான சேவைகள் தேவைக்கேற்ப தொடங்கப்படலாம் எனவும் கூறினார். பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், வளைகுடா உள்ளிட்ட பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு இந்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
கரோனா தீநுண்மி அச்சுறுத்தல்களினாலும், ஊரடங்கு உத்தரவினாலும், நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து மே மாதம் 3ஆம் தேதிவரை விமான பயணங்களுக்கு மக்கள் முன்பதிவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் பார்க்க:கரோனா காலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சேவை