கரோனோ வைரஸ் அதிவேகமாக பரவி வரும் இன்றைய சூழலில் ஈரானில் சிக்கித் தவித்து வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள், பாதிரியார்கள் அதிமுக எம்பிக்கள் ஆகியோர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஈரானில் உள்ள மூன்று தீவுகளில் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி ஒரு குழுவாக வந்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம். அவர் எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். மேலும், ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்" என்றார்
கோட்டாறு மறைமாவட்ட பாதிரியாரான சூசை ஆண்டனி கூறும்போது: "எங்களுடைய மீனவர்கள் 492 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கூறினோம். அங்கு தங்கியுள்ள அவர்களுக்கு உரிய முறையில் உணவு, தண்ணீர், உடை ஆகியவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்". என்றார்.