உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மக்களுக்குத் தொடர்ந்து, பரிசோதனை செய்வது மட்டுமே வழி என சிலர் கூறுகின்றனர். இதனால் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் கரோனா பரிசோதனைக் கருவி வாங்கப்பட்டது.
இதனை 600 ரூபாய்க்கு மத்திய அரசு வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ரூ.245க்கு வாங்கப்பட வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஹ்மத் படேல் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், 'கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள மருத்துவ எமர்ஜென்சி காலத்தில், விரிவான சோதனையைக் குறைந்த பணத்தில் செய்ய வேண்டும். இந்தச் சூழலில் மக்களின் பொதுநலமே முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு உரிய விளக்கத்தை இதுவரை ஏன் அளிக்கவில்லை' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ‘இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன’ - மத்திய அரசு